சென்னை:
பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய ஏதுவாக, அதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் தனது உரையைப் புறக்கணித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (ஜன.24) ஆளுநர் உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்துப் பேசினார்.
முதல்வரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்தது. முதல்வர் தனது பதிலுரையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பகுதி நேர ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
இந்தக் கோரிக்கைகளில், ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறைக் காலமான மே மாதத்தில் அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது .
அவர்களின் முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கக்கூடிய நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.