நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!!

ராய்ப்பூர்:
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. 208 ரன்கள் என்ற இலக்கை 15.2 ஓவர்களில் இந்திய அணி எட்டியது.

இதற்கு இந்திய வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் முக்கிய காரணமாக அமைந்தனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், ராய்ப்பூரில் நேற்று இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இதில் டாஸை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் மிட்செல் சான்டனர், 27 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா, 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

கிளென் பிலிப்ஸ் மற்றும் கான்வே தலா 19 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக், ஹர்ஷித், வருண் மற்றும் துபே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் (6) மற்றும் அபிஷேக் சர்மா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் இஷான் கிஷனும், கேப்டன் சூர்யகுமார் யாதவும் அபார பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் மூன்றாது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்தனர்.

இஷான் கிஷன், 32 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 11 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், 37 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அவர் களத்தில் இருந்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் சுமார் ஓராண்டுக்கு பிறகு அவர் அரை சதம் கடந்தார். ஷிவம் துபே, 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி 209 ரன் இலக்கை 15.2 ஓவர்களில் எட்டியது.

இந்த தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதில் ஆட்ட நாயகன் விருதை இஷான் கிஷன் வென்றார். இந்த தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜன.25) கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி இலக்கை எட்டிய அதிகபட்ச ரன்களாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது. முன்னதாக, இதே 209 ரன்கள் இலக்கை கடந்த 2023-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா வெற்றிகரமாக எட்டி இருந்தது.

டி20 கிரிக்கெட்டில் 6 முறை இந்திய அணி 200+ ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *