ராய்ப்பூர்:
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருந்தன. காயம் காரணமாக அக்சர் படேல் களமிறங்கவில்லை. அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டனர். நியூஸிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.
டிம் ராபின்சன், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க் ஆகியோர் நீக்கப்பட்டு டிம் ஷெய்பர்ட், மேட் ஹென்றி, ஜாக் ஃபோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார். டெவன் கான்வே 19, டிம் ஷெய்பர்ட் 24, கிளென் பிலிப்ஸ் 19, டேரில் மிட்செல் 18, மார்க் சாப்மேன் 10 ரன்கள் சேர்த்தனர்.
இறுதிக்கட்ட ஓவர்களில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், ஜாக் ஃபோக்ஸ் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களும் விளாசினர்.
இந்த ஆட்டத்தில் தொடக்க ஓவரை வீசியிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 18 ரன்களை தாரைவார்த்தார். இதன் மூலம் ஆட்டத்தின் முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர்களில் புவனேஷ்வர் குமாருடன் சாதனையை பகிர்ந்துகொண்டார்.
அவர், 2022-ல் அயர்லாந்துக்கு எதிராக 18 ரன்களை வழங்கியிருந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய 2-வது ஓவரிலும் 18 ரன்கள் விளாசப்பட்டன. ஒட்டுமொத்தமாக 4 ஓவர்களை வீசிய அவர், 53 ரன்களை வாரி வழங்கினார்.