திருநெல்வேலி:
“தமிழக வெற்றி கழகத்தில் எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட அதன் தலைவருக்கு தெரியாது.
விஜய்க்கு எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியமும் பாஜகவுக்கு இல்லை” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே அமைந்துவிட்டது.
இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தாத அளவுக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றார்கள். நிச்சயமாக உறுதியாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதில் கிடைக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முதல்வர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை வழங்கி வருகிறார். தேர்தல் வருவதால் திமுகவுக்கு பயமும், நடுக்கமும் வந்துவிட்டது.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார்.
இதன் மூலமாக அவர் அரசு ஊழியர்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்துள்ளார்.
யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜக இல்லை. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம். தமிழக வெற்றி கழகத்தில் எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட அதன் தலைவருக்கு தெரியாது.
விஜய்க்கு பாஜக கட்சி எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. பா.ஜனதாவில் ஊழல் இல்லை. தீய சக்தி இல்லை. ஆகையால் பா.ஜனதாவை பற்றி விஜய் பேசி இருக்க மாட்டார்.
திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என ஒற்றை எண்ணத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அந்த வகையில் தான் டிடிவி தினகரனும் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.