ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் சுயமரியாதையோடு இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வைத்திலிங்கம் உள்ளத்தில் இருந்திருக்கிறது – ஸ்டாலின் பேச்சு!

தஞ்சாவூர்:
“ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் சுயமரியாதையோடு இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வைத்திலிங்கம் உள்ளத்தில் இருந்திருக்கிறது. எனவே லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக அவர் வந்திருக்கிறார்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10,000 பேர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில், இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், “ இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருப்பவர்களை தலைமைக் கழகத்தின் சார்பில் நான் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில், நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வருகிற வழியில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நீங்கள் வந்து தலையைக் காட்டிவிட்டுச் சென்றால் போதும் என்றுதான் சொல்லி அழைத்து வந்தார்கள்.

நானும் அதே உணர்வோடுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனால் வந்து பார்த்ததற்கு பிறகு, இது என்ன இணைப்பு விழாவா? இணைப்பு விழா மாநாடா? என்று எண்ணும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் பேசாமல் சென்றால், உங்களுக்கும் நிம்மதி இருக்காது; எனக்கும் நிம்மதி இருக்காது.

அதனால், நான்தான் அவர்களிடத்தில் பேச வேண்டும் என்று வேண்டுகோளை எடுத்து வைத்து, உங்களிடத்தில் பேச வந்திருக்கிறேன்.

நம்முடைய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, தாய்க் கழகமாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அதற்கு பிறகு, ஒரு வார காலத்திற்குள்ளாக இந்தச் சிறப்பான இணைப்பு விழா நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே நான் எதிர்பார்த்தது;

நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவிற்கு இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் வைத்திலிங்கத்தை பல நேரங்களில் பார்த்ததுண்டு. எம்.ஜி.ஆர், அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் தலைமையில் நம்முடைய வைத்திலிங்கம் பணியாற்றுகிற நேரத்தில், அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சிறப்பாக – சுறுசுறுப்பாக அனைவரையும் கவரும் வகையில் அவர் பணியாற்றும் காட்சியை நான் பார்த்ததுண்டு.

ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அதிமுக உடைந்து, அது சின்னாபின்னமாகி இருந்த நிலையில், அப்போது அவர் சட்டமன்றத்தில் வந்து அமர்ந்திருக்கும் காட்சிகளை நான் பார்ப்பேன்.

அவருடைய முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும். எதையோ பறி கொடுத்ததுபோன்று உட்கார்ந்திருப்பார்.

ஏதோ வேண்டா வெறுப்போடு சில கேள்விகளைக் கேட்பார். ஏதோ வேண்டா வெறுப்போடு அமர்ந்திருக்கும் காட்சிகளை நான் பல நேரங்களில் சட்டமன்றத்தில் பார்த்ததுண்டு.

அது என்ன என்பதை இப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன். சுயமரியாதை யோடு நாம் இருக்க முடியவில்லையே; சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கிறது.

என்ன, அவர் சற்று லேட்டாக வந்து சேர்ந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றப் போகிறார். இதுதான் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

எனவே, தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு நெருங்கும் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, இணைந்திருக்கும் தொண்டர்களை, ஏற்கனவே நம்முடைய வைத்திலிங்கத்தை அறிவாலயத்தில் நான் வரவேற்று மகிழ்ந்திருந்தாலும், இன்று உங்களோடு சேர்ந்து அவரையும் வரவேற்று, உங்களையும் வரவேற்று, தேர்தல் பணியாற்ற உறுதி எடுப்போம்; சபதம் ஏற்போம்.

மீண்டும் நம்முடைய திராவிட மாடல் அரசு உதயமாகி, ஏற்கனவே செய்திருக்கும் சாதனைகளை மிஞ்சும் அளவிற்கு மேலும் பல சாதனைகளை உருவாக்கித் தருவதற்கு, நம்முடைய பணி மும்முரமாக இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, வெல்வோம் 200 – படைப்போம் வரலாறு.” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *