தஞ்சாவூர்:
“யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு சாட்சியாக நமது முதல்வர் எதற்கும் துணிந்து, என்னுடைய உயிர் திராவிடம் தான் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு துணையாக திராவிடத்தை காக்க பாடுபட வேண்டும் என சிபிசக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல், நான் முதல்வர் மடியில் விழுந்துவிட்டேன்” என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
ஒரத்தநாடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் அதிமுகவில் பெரும் செல்வாக்கோடு இருந்தார்.
இவர் கடந்த 21-ம் தேதி திமுகவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அறிவாலயத்தில் இணைந்தார்.
இதையடுத்து தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இன்று டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10,000-க்கும் மேற்பட்டோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாட்டு பந்தல் அருகே இதற்காக தனியாக அமைக்கப்பட்ட மேடைப்பந்தலில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏவும், மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் வரவேற்றார்.
எம்.பியும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி , முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்தார். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதையடுத்து விழாவில் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது: நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவுக்கே முன்மாதிரியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மகளிர் உரிமை தொகை வழங்குவதால், பெண்கள் முதல்வரை மனமார வாழ்த்துகிறார்கள்.
புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இன்றைக்கு திராவிடத்தை கண்டாலே சிலர் மனவேதனை அடைகின்றனர். யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு சாட்சியாக நமது முதல்வர் எதற்கும் துணிந்து, என்னுடைய உயிர் திராவிடம் தான் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இப்போது நாம் அவருக்கு துணையாக இந்த திராவிடத்தை காக்க பாடுபட வேண்டும் என சிபிசக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல், நான் முதல்வர் மடியில் விழுந்துவிட்டேன். என்று அவர் கூறினார்.