விதிகளை மீறிய ஆட்டோக்களை ஓட்டிய டிரைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய பெண் கலெக்டர் பிரியங்கா!!

திருவனந்தபுரம்:
மக்களின் நலனுக்கான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்துவது, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படக்கூடியவர்கள் மாவட்ட கலெக்டர்கள்.

ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் படைத்த அவர்கள், சில நேரங்களில் சில விஷயங்களின் உண்மை நிலையை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஆட்டோக்களின் விதிமீறலை கண்டுபிடிக்க பெண் கலெக்டர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் களத்தில் இறங்கினார்.

அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்கியது கண்டறியப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் பிரியங்கா. இவர் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார்.

எர்ணாகுளம் மாவட்டத்தின் மூன்றாவது பெண் கலெக்டரான அவர், தான் பொறுப்பேற்றதில் இருந்தே மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

இந்த நிலையில் கொச்சி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவது அவரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அதனை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கினார். அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் கொச்சி மாநகர பகுதியில் சாதாரண உடையணிந்து சென்றார்.

அவருடன் போக்குவரத்து அதிகாரிகளும் சாதாரண உடையில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து சென்ற கலெக்டர் பிரியங்கா ஒரு இடத்திற்கு சென்றதும், அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவை சவாரிக்கு அழைப்பது போன்று சத்தம் போட்டு அழைத்தார்.

இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் கலெக்டரின் அருகில் சென்றார். அப்போது அந்த ஆட்டோவில் மீட்டர் ஓடாமல் இருந்துள்ளது. இதையடுத்து கலெக்டர் பிரியங்கா, மீட்டர் ஓடாதா…? என்று கேட்டுள்ளார்.

தன்னிடம் கேள்வி கேட்பது கலெக்டர் என்பது தெரியாமல், “இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் வந்து, அந்தப் பெண் கலெக்டர் என்பதை விளக்கினர்.

சாதாரண பெண் என்று தான் பேசி மாட்டிக்கொண்டதை அந்த ஆட்டோவின் டிரைவர் அறிந்து என்ன செய்வதென்று விழித்தார்.

இதேபோல் கொச்சி மாநகர பகுதியில் பல இடங்களுக்கு நேரடியாக சென்று ஆட்டோக்களின் விதிமீறல்களை கலெக்டர் கண்டுபிடித்தார்.

அந்த ஆட்டோக்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கலெக்டர் தலைமையில் 6 குழுக்கள் இந்த அதிரடி ஆய்வில் ஈடுபட்டன.

மொத்தம் 365 ஆட்டோக்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் மொத்தம் 174 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

72 ஆட்டோக்களில் மீட்டர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் உடனடியாக மீட்டர் பொருத்த டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

அது மட்டுமின்றி விதிகளை மீறி ஆட்டோக்களை ஓட்டிய டிரைவர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர், பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *