திருப்பூர்:
திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன்(வயது 58). இவர் அ.தி.மு.க.வின் மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
அவரது உடல் இன்று மதியம் 12 மணிக்கு திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனின் மறைவு அ.தி.மு.க.வினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த குணசேகரன், 2011 முதல் 2016 வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார்.
2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக பதவி வகித்து வந்தார். குணசேகரன் மறைவுக்கு அ.தி.மு.க., முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குணசேகரன், உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த அவர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப்பணிகளை ஆற்றி உள்ளார். சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றியவர்.
குணசேகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
குணசேகரன் மறைவையடுத்து திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் வணிகர்கள் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார், சி.மகேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.