இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் இந்த தமிழகம் தான் என அடித்துச் சொல்கிறேன் – முதல்வர் ஸ்டாலின்!!

தஞ்சாவூர்;
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி திருமலைசமுத்திரம் பகுதியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நேற்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகித்தார்.

மாநாட்டில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மாநாட்டை எழுச்சியுடன் கனிமொழி ஏற்பாடு செய்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், கரோனா காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் கூட்டுறவு சங்கக் கடன் தள்ளுபடி, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு என பெண்கள் கேட்காமலேயே அவர்கள் தேவையை நிறைவேற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி.

இதையெல்லாம் வீடு வீடாக பரப்புரை செய்யும் பெரிய கடமையை பெண்களான உங்களை நம்பி தான் ஒப்படைத்துள்ளேன்.

வீட்டு வாசல் வரை தான் ஆண்களால் போக முடியும். பெண்கள் நினைத்தால் சமையலறை வரை செல்லலாம், ஏன்? மனதுக்குள்ளும் செல்லலாம். அது தான் மகளிரின் பவர். மகளிர் தான் எப்போதும் பவர் ஹவுஸ்.

அடுத்து, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என தொகுதி வாரியாக பிப்.28 வரை பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளது. பிப்.7-ம் நாள் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி சந்திப்பு நடத்த ஆயத்தமாகி விட்டனர். பிப்.11 முதல் பூத் கமிட்டி மாநாடு மண்டல வாரியாக நடக்க உள்ளது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக திருச்சியில் 10 லட்சம் மக்கள் கூடும் மாநில மாநாட்டை பேரெழுச்சியோடு நடத்த உள்ளோம்.

ஜனநாயக போர்க்களத்தில் வெற்றியை பெறும் வரை உடன் பிறப்புகளான உங்களுக்கும், உங்களை வழி நடத்தும் தலைமைத் தொண்டனான எனக்கும் ஓய்வு இல்லை.

எதிரிகளின் பொய் பிரச்சாரங்களை பெண்களான உங்களால் தான் முறியடிக்க முடியும். அதனால் தான் அதிகமாக உங்களை நம்புகிறேன்.

அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி ஏராளமான பொய்களைச் சொல்லி உள்ளார். உலக வரைபடத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்றுவிட்டு, கனிமொழி சொல்வது போல தேர்தல் சீசனில் மட்டும் தமிழகத்துக்கு வருகிறார்.

பிரதமர் வருவதற்கு முன்பு 2 கேள்விகளை முன் வைத்தேன். ஆனால் அவர் எதற்கும் பதில் சொல்லாமல் வழக்கம் போல பழைய கன்டென்டையே பேசிவிட்டு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நமக்கு புது கன்டென்ட்டை கொடுத்துள்ளார்.

ஆனால், இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் இந்த தமிழகம் தான் என அடித்துச் சொல்கிறேன்.

மணிப்பூரில் 3 ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக தான் மணிப்பூரை ஆட்சி செய்தது.

மத்தியில், மாநிலத்தில் என டபுள் இன்ஜின் ஓட்டியவர்கள் ஏன் மணிப்பூர் மக்களை காப்பாற்றவில்லை? ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக ஆளும் மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தான் போதைப் பொருட்கள் செல்கிறது. இதையெல்லாம் மறைத்துவிட்டு தமிழகத்தின் மீது அவதூறு பரப்பாதீர்கள்.

தமிழகத்தில் ஏதோ புதிதாக கூட்டணியை அமைப்பது போல தோளை உயர்த்திக் காட்டுகின்றனர்.

தோல்வியுற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு அதற்கு பில்டப் கொடுத்திருக்கிறார்கள். ஈடி, ஐடி, சிபிஐ என ஏதோ ஒருவகையில் பாஜக-விடம் சிக்கி, அந்த வாஷிங் மெஷின் நம்மையும் வெளுக்காதா என கையைக் கட்டி உட்கார்ந்துள்ளனர்.

ஏற்கெனவே இதே பாஜக – அதிமுக கூட்டணி 2019, 2021 தேர்தல்களில் தோல்வியுற்றது. 2024 தேர்தலில் பாஜக என்ற வேஸ்ட் லக்கேஜை அதிமுக கழற்றிவிட்டு, பிறகு சேர்ந்து கொள்ளலாம் என மறைமுகக் கூட்டணியாக நின்றனர்.

எத்தனை கெட்அப் மாற்றினாலும் தே.ஜ கூட்டணிக்கு மக்கள் கெட் அவுட் தான் கூறுவார்கள்.

பாஜக-வின் கட்டாயத்தால், மிரட்டல் உருட்டலால் உருவான பிளாக் மெயில் கூட்டணி தான் அதிமுக – பாஜக கூட்டணி. உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக அமித் ஷாவால் திணிக்கப்பட்ட, பல வழக்குகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய பதவியை தக்க வைக்க பழனிசாமி உருவாக்கிய சுயநலக் கூட்டணி.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.ஜ கூட்டணிக்கு எதிர் திமுக கிடையாது. தே.ஜ கூட்டணிக்கு எதிர் தமிழ்நாடு தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

திமுக கூட்டணிக்கு மீண்டும் வெற்றியை தர மக்கள் தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *