தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை:
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ என்ற பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி, திராவிட கொள்கைகளுடன் கூடிய சிறந்த 100 தமிழ் பேச்சாளர்களை கண்டறிந்து தருமாறு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தெரிவித்தார்.

அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்து 17 ஆயிரம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. இதில், முதல் சுற்றில் 913 பேரும், அடுத்த சுற்றில் 182 பேரும் தேர்வாகினர்.

கடந்த 26-ம் தேதி நடத்தப்பட்ட இறுதி போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டினார். அடுத்த ஆண்டும் இதுபோன்ற பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும்.

தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’ திறக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியிருந்தார். இதில் 75 தொகுதிகளில் ஏற்கெனவே நூலகம் திறக்கப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு நூலகத்திலும் 4,000 முதல் 5,000 புத்தகங்கள் உள்ளன. அருகே உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் அளவில் நூலகங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன.

அடுத்த 3 மாதங்களுக்குள் 234 தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *