சென்னை:
கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில், தென் சென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கான உயர்தர சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்க சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் சார்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில், 4,63,544 சதுர அடி பரப்பளவில் ரூ. 417.07 கோடி மதிப்பில் கட்டப் படுகிறது. இக்கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், நோயுற்ற குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவு, குழந்தை மருத்துவப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், குழந்தை மருத்துவக் கல்விக்கு ஆதரவளிக்கவும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், மேலும் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை எளிதாக்கவும் உதவும்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத்துறை செயலர் ப. செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் எ. அருண் தம்புராஜ், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.