சென்சார் சான்றிதழ் தர தாமதிப்பதாக கூறி தணிக்கை வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய்க்கு ஆதரவாக மன்சூர் அலிகான் பேச்சு!!

சென்னை:
முரளி கிரிஷ்.எஸ் இயக்கத்தில் நாளை மறுநாள் (30-ந்தேதி) திரைக்கு வர இருக்கும் படம் ‘கருப்பு பல்சர்’. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ் மதுனிகா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார்.

சமீப காலமாக விஜய்யை கடுமையாக எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வந்த மன்சூர்அலிகான் நேற்று நடந்த ‘கருப்பு பல்சர்’ பட விழாவில் ‘ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசினார்.

படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தாமதிப்பதாக கூறி தணிக்கை வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-
படம் எடுப்பது என்பது படைப்பாளியின் சுதந்திரம். ஆனால் தற்போது அந்த சுதந்திரம் பறிபோய் கொண்டு இருக்கிறது. படைப்பாளிகள் நசுக்கப்பட்டு வருகிறார்கள்.

மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாமல் தணிக்கை வாரியம் செய்வது எந்த வகையில் நியாயம்.

மத்திய அரசு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

அந்த படத்துக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஏன் தணிக்கை வாரியம் யோசிக்க மறுக்கிறது.

இந்த படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது. அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள் .ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அந்த படத்தை வரவிடாமல் செய்து விட்டார்கள்.

இப்போது அந்த படத்தை வெளியிடவே கூடாது என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள் .

தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக தெரிகிறது.

மத்திய அரசும் அதற்கு துணை போகிறது. நாட்டில் எவ்வளவோ அத்துமீறல்கள் அடக்கு முறைகள் மக்கள் பிரச்சனைகள் இருக்கும் போது துளி கூட செவி சாய்க்காத மத்திய அரசு இது போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து முழுமூச்சாக இறங்குவது பயமாக இருக்கிறது. இப்படி சென்றால் படைப்பாளியின் சுதந்திரம் என்ன ஆவது.

இதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன். எந்த இடத்திலும் பயம் இல்லாமல் பேசுவேன். எனக்கு யாரைப் பற்றியும் கவலை கிடையாது. திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும்.

இந்த போக்கு தொடர்ந்தால் படங்கள் இனி சுதந்திரமாக வெளிவர முடியாது. என்னை கேட்டால் தணிக்கை வாரியமே எதற்கு என்பேன். நல்ல படத்தை மக்கள் மதிப்பீடு செய்து சான்றிதழ் அளித்தால் போதும். எதற்கு தணிக்கை வாரியம்? என்று பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *