விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கு நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகி போட்டியில் விதவிதமான ஆடைகளை அணிந்து திருநங்கைகள் ஒய்யாரமாக ரேம்ப் வாக்கில் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகு கவர்ந்தது.
விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கு நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிஒ போட்டியில் விதவிதமான ஆடைகளை அணிந்து திருநங்கைகள் ஒய்யாரமாக ரேம்ப் வாக்கில் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகு கவர்ந்தது. இந்த ஆண்டின் மிஸ் கூவாகம் பட்டத்தினை உதவி மருத்துவரான ஈரோட்டைச் சார்ந்த ரியா முதல் இடத்தை பிடித்தார்.
மகாபாரதப் போரில் வெற்றி கிடைப்பதற்காக அரவான் என்ற இளவரசன், பஞ்ச பாண்டவர்களால் கள பலி கொடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுகூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இங்கு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து வரும் 24ஆம் தேதி கூத்தாண்டவர் தேரோட்டமும், திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா, கர்நாடகா, டில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர்.
இப்படி விழுப்புரத்தில் குவிந்துள்ள திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் மிஸ்கூவாகம் அழகி போட்டி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் ரேம்ப் வாக்கில் நடந்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதில் 2024ஆம் ஆண்டிற்கான மிஸ்கூவாகம் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் இந்த ஆண்டிற்கான மிஸ் கூவாகம் முதல் இடத்தை உதவி மருத்துவரான ஈரோட்டினை சார்ந்த ரியா பெற்றார்.
தூத்துக்குடியை சார்ந்த நேகா இரண்டாம் இடத்தையும் சென்னையை சார்ந்த யுவான்ஜிலி ஜான் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் இடம்பிடித்தவருக்கு 50 ஆயிரமும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரமும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 11 ஆயிரம் வழங்கப்பட்டது.
மிஸ் கூவாகம் போட்டியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறந்த 5 திருநங்கைகளுக்கு விருதுகளை வழங்கினார். திருநங்கைகளை குடும்பத்திலுள்ள தாய் தந்தையர்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும், திருநங்கைகளை வீட்டை விட்டு வெளியேற்றகூடாது என்றும் ஆண்கள் – பெண்களுக்கு நிகராகப் பார்க்க வேண்டும் எனவும் முதல் இடம் பிடித்த ரியா வலியுறுத்தியுள்ளார்.