காங்கிரஸ் கட்சிக்கு விஜய் ‘பவர்’ கொடுக்க முடியும் ; பவர் கொடுத்தால் மீண்டும் அந்த வரலாறை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும் – எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு!!

சென்னை:
தவெகவுடன் சேர்ந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ‘பவர்’ கிடைக்கும் என திரைப்பட இயக்குநர் எஸ்ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில், தவெக தலைவர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநரும் எஸ்.ஏ.சந்திரசேகர் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 60 ஆண்டுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வரும் நிலையில், புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது, அவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவது வழக்கம் தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மாற்றத்தை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு முயற்சிப்பவர்கள் அதற்கான தடைகளை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, இளைஞர்கள் எல்லாம் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். 50, 60 வயதான பெண்மணிகள் கூட அரசியல் பேசுகின்றனர்.

ரூ.3 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்வோம். ஆனால், ஓட்டு விஜய்க்குத் தான் என்று கூறுகின்றனர். எனவே, மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

விஜய்க்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ‘யாருடனும் சேர்ந்து விடாதே, உன்னுடைய சுயம் போய்விடும், நீங்கள் தனியா நில்லுங்கள், ஜெயிக்க வைக்கிறோம்’ என்று விஜய்யை பார்த்து மக்கள் கூறுகிறார்கள்.

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஒரு கட்சி, இங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து தற்போது தேய்ந்து போய்விட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் ‘பவர்’ கொடுக்க முடியும் என்று கூறுகின்றனர். அவ்வாறு ‘பவர்’ கொடுத்தால் மீண்டும் அந்த வரலாறை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும். எங்களுடன் கூட்டு சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என்று விஜய் கூறுகிறார்.

அதிகாரத்துக்கு வந்தால் காங்கிரஸ் பழைய நிலையை அடைய முடியும். இந்த வாய்ப்பை (கூட்டணி) காங்கிரஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு என்னைவிட அதிகமாக தெரிகிறது. 3 ஆயிரம் ரூபாய் இப்போது தருகிறீர்கள். 4 வருடங்களாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு வயதான பெண்மணி கேள்வி கேட்கிறார்.

ஒரு நாளைக்கு ஒரு திட்டம் அறிவிக்கிறீர்கள். இது எதற்காக என்று எங்களுக்கு தெரியும் என்று நான் கூறவில்லை, வயதானவர்கள் கூறுகிறார்கள்.

ஜனநாயகன் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று சாலையில் செல்லும் ஒரு சாதாரண பெண்மணிக்கு கூட தெளிவாக தெரியும். திரைப்படத்துக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை, சம்பந்தப்படுத்தாதீர்கள். விஜய் இப்போது நடிகர் இல்லை.

அவர் அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. திரைப்படத்தை பற்றி அவர் கவலைப்படவில்லை. திரைப்படத்தை வைத்து அவரை பிளாக் மெயில் செய்வது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

‘பூஸ்ட், ஹார்லிக்ஸ் சாப்பிட்டு தான் இருக்கிறோம்’

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ரயில் மூலமாக காஞ்சிபுரம் செல்ல நேற்று அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வந்தார்.

அப்போது செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘‘தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட் கொடுக்கிறார்.

அதனை, அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள்.

நாங்கள் எல்லாம் ஏற்கெனவே பூஸ்டில் தான் இருக்கிறோம். எங்கள் தலைவர் ராகுல்காந்தி முன்னதாக பூஸ்ட் கொடுத்துள்ளார்.

நாங்களும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் சாப்பிட்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் அவர் பூஸ்ட் கொடுக்கிறார் என சொன்னதற்கு நன்றி” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *