மார்ச் 8-ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா !!

திருச்சி:
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த திமுக மாநில மாநாடு தேதி மாற்றப்பட வாய்ப்புள்ள தாகத் தெரிகிறது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை ஒவ்வொரு வாரமும் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறும்.

அப்போது, திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக ஏராளமான மலர்களை எடுத்துவந்து விடிய விடிய அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதில், முதல் வாரம் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

அன்றைய தினம் விழாவுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால் பக்தர்கள் இடையூறின்றி கோயிலுக்கு செல்ல வசதியாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி – பெரம்பலூர் இடையே போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும்.

போக்குவரத்து ஸ்தம்பிக்க வாய்ப்பு: அதன்படி, நிகழாண்டு சமயபுரம் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும், அதே நாளில், சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் திமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பந்தல்கால் நடப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனால், அன்றைய தினம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்பதால் பக்தர்கள் கவலை யடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘சமயபுரம் கோயில் முதலாவது பூச்சொரிதல் விழா மார்ச் 8 அன்று நடைபெற உள்ளது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், அமைச்சர் கே.என்.நேருவிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள் என நம்பிக்கையுடன் இருக் கிறோம்’’ என்றனர்.

இதுகுறித்து திமுக தரப்பில் விசாரித்தபோது, ‘‘சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடக்கும் தேதியில் திமுக மாநாடும் நடைபெற உள்ளது குறித்து தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இதுகுறித்து பரிசீலனை செய்து தலைமை முடிவெடுக்கும். அநேகமாக மாநாடு தேதி மாறவும் வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *