சென்னை:
ஓரிரு நாளில் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். திமுகவிடம் கொடுப்பதற்காக தாங்கள் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது.
டெல்லியில் ராகுல்- கனிமொழி சந்திப்புக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார், அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நவேதித் ஆல்வா ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.
இதில் காங்கிரஸூக்கு வெற்றி வாய்ப்புள்ள, ஒரு மக்களவை தொகுதிக்கு 1 சட்டப்பேரவை தொகுதி வீதம் 39 சட்டப்பேரவை தொகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து பாதயாத்திரை நடத்துவது, அதற்கு தேசிய தலைவர்களை அழைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை ஆகியோர் தலைமையில் நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மகாத்மா காந்தி பெயரை ஊரக வேலை உறுதி திட்டத்திலிருந்து நீக்கியதை கண்டித்து வரும் பிப்.5-ம் தேதி மிகப்பெரிய பாதயாத்திரையை தொடங்க உள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் இந்த பாதயாத்திரை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்’’ என்றார்.
தொடர்ந்து கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இன்று (பிப்.2) காலை திமுக எம்.பி கனிமொழியிடம் தொலைபேசியில் பேசினேன். இன்னும் ஓரிரு தினங்களில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச உள்ளோம்” என்றார்.
ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் தங்களிடம் பேசவில்லை என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன் பேசியது குறித்து கேட்டபோது, ‘‘இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக பேசுவோம்” என்றார்.
இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, தொகுதிகளின் பட்டியல், பாதயாத்திரை நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாக கட்சி தேசிய தலைமையின் ஒப்புதலை பெற கிரிஷ் சோடங்கர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
திமுக இன்று குழு அமைப்பு: கடந்த வாரம் நடந்த ராகுல் – கனிமொழி சந்திப்பின் போது தொகுதி பங்கீடு உள்ளிட்ட கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி சர்ச்சைகளுக்கு தற்காலிமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ந்து திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குழுவில் எம்பி கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் இடம் பெறுவார் கள் என்று கூறப்படுகிறது. இக்குழு ஒவ்வொரு கூட்டணி கட்சியினருடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும்.
இதற்கான அறிவிப்பு இன்று(பிப்ரவரி 3) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், திமுக 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட விரும்புவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.