ஹராரே:
ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.
பைசல் ஷினோசாடா 93 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 110 ரன்களும் உசைருல்லா நியாசி 86 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 101 ரன்களும் விளாசினர்.
இந்திய அணி தரப்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
311 ரன்கள் இலக்குடன் பேட் செய்த யு-19 இந்திய அணி 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான ஆரோன் ஜார்ஜ் 104 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசினார்.
மற்றொரு தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் சேர்த்தனர். விஹான் மல்ஹோத்ரா 38, தேதாந்த் திரிவேதி 5 ரன்கள் எடுத்தனர்.
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணி நாளை (6-ம் தேதி) இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.