புதுச்சேரி:
குமரியில் இருந்து காஷ்மீருக்கு செல்லும் விவசாயிகள் யாத்திரை குழுவினர் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.

அப்போது, விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்ததாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில், எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை கடந்த பிப்.7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
இந்த யாத்திரை குழுவினர் இன்று புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழகத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, பொன்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் அவரிடம் இப்பயணம் தொடர்பாக விளக்கினர்.
அதைத்தொடர்ந்து தமிழக மாநிலத்தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறுகையில், “மறைந்த வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என யாத்திரை தொடங்கியுள்ளோம். காஷ்மீர் வரை செல்கிறோம்.
டெல்லியில் மார்ச் 19-ல் பேரணி நடத்தி அடுத்தக் கட்ட முடிவுகள் எடுப்போம். அமெரிக்காவுடன் தடையற்ற ஒப்பந்தம் குறித்து எவ்வித விவாதமும் நாடாளுமன்றத்தில் நடத்தாமல் திடீரென்று ஏற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் வெளியிட்டவுடன் பிரதமர் அறிவித்துள்ளார்.
வேளாண்மை கேள்விக்குறியாகவுள்ளது. வெளிநாட்டு வேளாண்மை பொருட்கள் இறக்குமதியால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அழிந்து போவார்கள். முதலில் விவசாயிகளிடம் கருத்து கேட்பதுடன் நாடாளுமன்றத்தில் விவாதிப்பது அவசியம்.
இப்பயணம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கைகளை தெரிவித்தோம்.
இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவேன் என்று உறுதி தந்தார். வரும் 21ம் தேதி புதுச்சேரி வரும் பிரதமரிடமும் நேரிலும் எடுத்து சொல்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திப்போம், அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ப்யூஸ் கோயல், நாடாளுமன்றம் நடக்கும்போது மரபுப்படி அறிக்கை தாக்கல் செய்து பேசியிருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்க அச்சப்படுவது ஏன் ? ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முன் நாடாளுமன்றம் நடக்கும் போது வெளியில் அறிவித்தது தவறு. அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
யூஸ் கோயல் கருத்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கருத்து. பிரதமர், வேளாண் அமைச்சர் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்” என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.