திருச்சி:
“தவெகவைப் பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் விஜய் மக்களை சந்திப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள்” என்று தவெக தேர்தல் அறிக்கைக்குழு தலைவர் அருண்ராஜ் கூறினார்.

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மத்திய மண்டலத்திற்கான தவெகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தலைமை நிர்வாகி கே.ஜி.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஜேசிடி பிரபாகரன், ஏ.ராஜ்மோகன், டிஎஸ்கே.மயூரி, பேராசிரியர் ஏ.சம்பத்குமார், எம்.அருள்பிரகாசம், விஜய்.ஆர்.பரணிபாலாஜி, டாக்டர் ஜெ.முகமது பர்வேஸ், டாக்டர் டிகே. பிரபு, கே.கிறிஸ்டி பிரித்வி, எம்.கே.தேன்மொழி பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் விவசாயிகள், தொழில் அதிபர்கள் பங்கேற்று தவெக தேர்தல் அறிக்கையில் கொடுக்க வேண்டிய வாக்குறுதி குறித்தான மனுக்களை வழங்கினர்.
அதைத்தொடர்ந்து அறிக்கை குழு தலைவர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எந்த அரசுப் பதவியிலும் இல்லாத விஜய் செய்தது ஊழல் கிடையாது. எதை வைத்து விஜய் ஊழல் செய்தார் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் எனத் தெரியவில்லை. அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
வரி ஏய்ப்பு என பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. காலம் தாழ்த்தப்பட்ட ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதை சட்டப்படி எதிர்த்து மனுதாக்கல் செய்தோம். நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணியை நம்பி தவெக தொடங்கப்படவில்லை. இருந்தாலும் கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜய் அறிவிப்பார்.
அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிக்காட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக கூட்டம் நடத்தினால் உடனடியாக அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. தவெகவைப் பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் விஜய் மக்களை சந்திப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.