குழந்தை பாக்கியம், கிடைக்க வழிபட வேண்டிய சிறந்த பரிகார தலம் தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது, தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில். மிகவும் பழமைவாய்ந்த இக்கோவிலில் முருகப்பெருமான், குமாரசாமி என்ற திருநாமத்துடன் வள்ளி – தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.

இத்தலத்தில், தேவர்கள் இருப்பதை கண்ட முனிவர்கள், அவர்களை போற்றி வணங்கி உள்ளனர். இதனால் தேவர்களை கண்ட ஊர்’ என்பதே பின்னாளில் மருவி ‘தேவர் கண்ட நல்லூர்’ என்றானது.

முன்னொரு காலத்தில் இப்பகுதியை வல்லால மகாராஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.

அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை இம்மண்ணில் பிறந்தால் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதால், குழந்தையை அழிக்க வேண்டும் என தேவர்களும், முனிவர்களும் பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, அந்த குழந்தையை அழிக்க பார்வதி தேவி மருத்துவச்சி வேடம் பூண்டு இங்கு வந்தார். அப்போது வல்லால மகாராஜன், அவரை அழைத்து தன் மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்டான்.

இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட மண்ணில் விழாமல் பார்வதி தேவி காத்தார். இதை அறிந்த மன்னன், பார்வதி தேவியை வாளால் வெட்ட முயன்றான்.

இதனால் கோபமடைந்த பார்வதி தேவி, மன்னனின் தலையை வெட்டி எறிந்தார். பார்வதியின் ஆக்ரோஷத்தை போக்க, பெருமாள், ஈசன் மற்றும் தேவர்கள் முயற்சித்தனர்.

இருப்பினும் தேவியின் ஆக்ரோஷம் அடங்காத நிலையில், முருகன் நேரில் சென்று தாயின் ஆக்ரோஷத்தை தீர்த்ததால், பின்னாளில் இத்தலத்தில் குமரன் கோவில் அமைக்கப்பட்டது.

கிழக்கு முகமாக அமைந்துள்ள இக்கோவிலில் மூலவரான குமாரசாமி, வள்ளி – தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.

இங்கு விநாயகரும் காணப்படுகிறார். கோவிலில் உள்ள விசாலமான மகாமண்டபத்தில் அமர்ந்து சுவாமியை தரிசனம் செய்யலாம். கோவிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.

திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு வேண்டுபவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

திருவாரூர் – மன்னார்குடி சாலையில் 8 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *