ஆடி முதல் ஞாயிறு நெருங்கிவிட்டது. இப்போதே திருமணமான பெண்கள் கணவன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றும் கன்னிப்பெண்கள் வருங்கால கணவர் நல்லவராகவும், மனதிற்கு பிடித்தவராகவும் எந்தவித தோஷங்களும் இருக்கக் கூடாது என்றும் விரதமிருந்து வேண்டிக்கொள்வதற்காக சுமங்கலி பூஜைக்கு ஆயத்தமாகி இருப்பர்.
பெரும்பாலான பெண்கள் சுமங்கலி பூஜை எப்படி செய்ய வேண்டும், அம்பிகையை விரதமிருந்து வழிபடும் முறை முதலானவற்றைதெரிந்து வைத்திருப்பர். ஆனால், சுமங்கலி பூஜையின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்திருக்கமாட்டார்கள். அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்…
சுமங்கலி பூஜையின் போதும் சரி, பொதுவாக அன்றாடம் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைக்கும் போதும் சரி “ஓம் தீர்க்க சுமங்கலி தேவியை, இரட்சிப்பாய் இரட்சிப்பாய்” என்ற இந்த மந்திரத்தை மனதார சொன்னாலே போதும்.
நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கும் போது, “ஓம் மஹிமா சக்தியை திலக தேவியை பூரண சக்திதா நமோ நமஹ” என்ற மந்திரத்தையும்,நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போது, ” ஓம் யாதேவி சர்வ பூதேஷூ ஸ்ரீம் ஐம் க்லீம் சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை யோகம் இரட்சிப்பாய் இரட்சியப்பாய் நமோ நமஹ”என உச்சரிக்க கணவரின் ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
சுமங்கலி பூஜை செய்வதற்கு உகந்த நேரம்:
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை சுமங்கலி பூஜை செய்யலாம். பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம். காலையில் சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து, சுமங்கலி பெண்களுக்கு இரவு உணவு பரிமாறலாம்.
சுமங்கலி பூஜையை ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய முடியாதவர்கள் ஆடி வெள்ளி நாளிலும் செய்து பலன் பெறலாம்.
சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள், பூஜையறையில் ஒரு மனை போட்டு, மாக்கோலமிட்டு, அந்த மனையில் அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம்.
அவ்வாறு வழிபடும் போது நித்திய சுமங்கலியான தாயே, உன் மகளான எனக்கும் நித்திய சுமங்கலி வரத்தை தந்தருள வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். அந்த அன்னையின் அருள் என்றென்றும் உங்களோடு நிலைத்திருக்கும்.