நாங்கள் கேட்கும்போழுது தேவையான திட்டங்களுக்கு நிதியை கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டு பட்டாவையே மாற்றி விடுவோம் – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் நகைச்சுவை பேச்சு!!

அருப்புக்கோட்டை:
”நாங்கள் கேட்கும்போழுது தேவையான திட்டங்களுக்கு நிதியை கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டு பட்டாவையே மாற்றி விடுவோம்” என்று அமைச்சர் கே.என்.நேருவிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நகைச்சுவையாக பேசினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம், செவல் கண்மாய் புனரமைப்பு பணி மற்றும் கட்டங்குடி குடிநீர் சுத்திகரிப்பு, நீருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.20.59 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளுக்கான திறப்பு விழா, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சாத்தூர் நகராட்சிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.24.33 கோடி மதிப்பில் 154 சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துடைய இயக்குநர் மதுசூதன ரெட்டி முன்னிலை வகித்தார்.

இதில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கே.என்.நேரு கூறியதாவது, ”கடந்த 5 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமாக நகராட்சிகளுக்கு மட்டும் ரூ.943 கோடி வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளுக்கு ரூ.191 கோடியை நம்முடைய முதல்வர் இந்த 5 ஆண்டுகளில் வழங்கி இருக்கிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளால் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.396 கோடியில் நிறைவேற்றப்பட்டு 3 லட்சம் மக்களுக்கு கூடுதலாக 43 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்திற்கு சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த கட்சிக்கும் அந்த கட்சிக்கும் என்ற போட்டி இல்லை, தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி. தமிழ்நாடு வெற்றி பெற்றால் தான் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும் என்று முதல்வர் கூறியுள்ளார். எனவே தான் அப்படிப்பட்ட வெற்றிக்காக அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்,” என்று கூறினார்.

முன்னதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ”மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்கட்டமைப்பு பணிகளுக்காக தேவையான போதெல்லாம் நிதியை வாரி கொடுத்தவர் அமைச்சர் நேரு.

நாங்கள் இன்னும் அதிகம் உங்களிடம் கேட்போம். தாராளமாக நிதி கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டு பட்டாவையே மாற்றி விடுவோம்,” என்று நகைச்சுவையாக பேசினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகனை பேசுமாறு அமைச்சர் நேரு அழைத்தார்.

எம்எல்ஏ அசோகன் பேசுகையில், “இந்த முறை போலவே வரும் தேர்தலிலும் நமது கூட்டணி ஆட்சி தான் அமையும். அப்போது நமக்கு தேவையான இன்னும் பல திட்டங்களை அரசு நிறைவேற்றிக் கொடுக்கும்” என்று கூறினார்.

இந்நிகழ்வில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன், விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *