வருடந்தோறும் கார்த்திகை தீப நாளன்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் – உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் – எல்.முருகன்!!

சென்னை,
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது மதுரை ஐகோர்ட்டு அமர்வு தீர்ப்பு வழங்கியது.


இந்தநிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள உயர்நீதிமன்றம்..! முருக பக்தர்களின் உணர்விற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி..! என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, மதுரை ஐகோர்ட்டு இன்று உறுதிபடுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில், கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து தீபம் ஏற்றலாம் என்று, கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு கோர்ட்டு தீர்ப்பளித்தும், அந்த தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் இந்து சமுதாய மற்றும் முருக பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டது அறநிலையத்துறை.

மேலும், பக்தர்களின் மீதும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மீதும், காவல்துறையை வைத்து அராஜக போக்கினை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது தமிழக அரசு.

இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரை வைத்துக்கொண்டு, கடந்த சில காலமாக இந்து சமய மக்களுக்கு எதிரான அறமற்ற துறையாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், இன்று மதுரை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பானது, தமிழக அரசிற்கும் அறநிலையத்துறைக்கும் குட்டு வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

தீபத்தூண், தர்காவிற்கே சொந்தம் என்ற அறநிலையத்துறையின் அறமற்ற வாதம் சிறுப்பிள்ளைத் தனமானது என்று கூறியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு கூறுவதை அபத்தம் என்றும் கடுமையாக சாடியுள்ளது.

முருக பக்தர்களுக்கும், இந்து சமுதாய மக்களுக்கும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தீவிர முருக பக்தரான அமரர் பூரணச்சந்திரன் அவர்களின் தியாகத்திற்கும் உரிய நீதியை இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்குப் பிறகாவது ஆட்சி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்துவதை விடுத்து, வருடந்தோறும் கார்த்திகை தீப நாளன்று, தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *