சென்னை:
நெடுஞ்சாலைத் துறை சார்பில், அண்ணா சாலையில் தேனாம் பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 3.20 கி.மீ.க்கு கட்டப்படும் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், எல்டாம்ஸ் சாலை,எஸ்ஐஇடி கல்லூரி சாலை, நந்தனம் சாலை உள்ளிட்ட 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில், தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ. தூரத்துக்கு 16.61 மீட்டர் அகலம் கொண்ட 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த கட்டுமானப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.