திருச்சி:
அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் தமிழகத்தில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும் என திருச்சியில் நேற்று நடைபெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசினர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: திருச்சியில் 2 தினங்களுக்கு முன் நடந்த திமுக மாநாட்டில் வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என்று ஸ்டாலின் பேசினார். ஆனால் வரும் தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்.
பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் தாய்மாமன் வீட்டு சீர் போல ஏதாவது திட்டங்களை கொண்டு வந்து தருவார். அந்தவகையில் இன்று திருச்சியில் ரூ.5,500 கோடி மதிப்பிலான திட்டத்தை வழங்கியுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கியுள்ளார். திமுக குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் மலரச் செய்ய வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: குஜராத்துக்கும், தமிழகத்துக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்துள்ளது. சங்க இலக்கியங்கள் இதை குறிப்பிட்டுள்ளன. வேளிர் எனப்படும் தமிழக மன்னர்கள் ஆண்ட திராவிட மண் குஜராத்.
குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடிக்கும், தமிழகத்துக்குமான உறவு தொப்புள் கொடி உறவு. மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தே.ஜ. கூட்டணி ஆட்சியை கொண்டு வர அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: இந்தியாவில் அதிகளவு கொலைகள், தற்கொலைகள், சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதற்கு போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளதே காரணம். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 22 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர அபின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களின் புழக்கம் உள்ளது. எனவே, மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுங்கள்.
கூட்டத்தில், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மத்திய அமைச்சர்கள் பியூஸ்கோயல், எல்.முருகன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஆர்.
விசுவநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கர், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
….