31 வருடங்களாக ரூ.250 மாத வாடகையில் இருந்த சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு!!

புதுடெல்லி:
உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத் மாவட்டத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தை காலி செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் பெயரில் 31 வருடங்களாக இந்த இடம் ரூ.250 மாத வாடகையில் இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யின் முராதாபாத்தில் சமாஜ்வாதி கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. உ.பி.யின் எதிர்கட்சியான சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் பெயரில் இந்த கட்டிடம், ஜூலை 13, 1994-ல் உபி அரசால் அளிக்கப்பட்டிருந்தது.

அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி ஆட்சியில் அதன் தலைவர் முலாயம் சிங் முதல்வராக இருந்தார். வெறும் 250 ரூபாய் மாத வாடகைக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடமானது, அப்போது முதல் சமாஜ்வாதியின் கட்சி அலுவலகமாக செயல்படுகிறது.

இதை தற்போது காலி செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முராதாபாத் மாவட்ட ஆட்சியரான அனுஜ் குமார் சிங், 30 நாட்களுக்குள் கட்டிடத்தைக் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முராதாபாத்தின் சிவி லைன் பகுதியில் உள்ள இக்கட்டிடத்தின் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என கணிக்கப்படுகிறது. ஆனால் வாடகை இன்னும் ரூ.250 மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கட்டிட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் ஆட்சியர் அனுஜ் குமாரின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த அக்டோபர் 10, 2022-ல் முலாயம் சிங் யாதவ் இறந்த பிறகு சமாஜ்வாதி சார்பில் சொத்து பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கப்படவில்லை.

இந்த நிலம் அரசு திட்டங்கள் மற்றும் அதிகாரிகளின் வீட்டு வசதிக்கு தேவை. அரசுக்கு சொந்தமான சொத்துகளை பொதுமக்கள் நலனுக்காக சிறப்பாகப் பயன்படுத்த வேண்டி உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 30 நாட்களுக்குள் கட்டிடத்தைக் காலி செய்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பங்களாவை காலி செய்யாவிட்டால், நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுக்கும்.

மேலும், ஒரு நாளைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தம் கட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் சமாஜ்வாதிக்கு ஏற்பட்டுள்ளது.

இதே போல் உ.பி.யின் 75 மாவட்டங்களிலுள்ள சமாஜ்வாதி அலுவலகங்களுக்கான இடம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றிலும் ஏதாவது அரசு நிலம் எனக் கண்டறியப்பட்டால் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு சிக்கல் ஏற்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *