அடக்கத்தையும், மனிதநேயத்தையும் வளர்த்துக் கொள்வதோடு, மக்களிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் – சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவ – மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!!

சென்னை:
‘அடக்கத்தையும், மனிதநேயத்தையும் வளர்த்துக் கொள்வதோடு, மக்களிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்’ என்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவ – மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

2025-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து 60 மாணவ – மாணவிகள் வெற்றிபெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே, அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவ – மாணவிகளுக்கு அரசுசார்பில் பாராட்டு விழா சென்னை விக்டோரியா அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாராட்டிப் பேசியதாவது: உங்கள் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், தமிழகத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டே வந்தது.

திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதை உடனடியாக சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்தோம்.

‘நான் முதல்வன்’ ஊக்கத்தொகை, உயர் பயிற்சி, நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளக்கூடிய சிறப்பு பயிற்சி என்று பல்வேறு முன்னெடுப்புகளை அரசு எடுத்தது. அம்முயற்சிகளுக்கு, நல்ல பலன் கிடைத்து வருகிறது.

இந்த ஆண்டு 60 பேர் தமிழகத்தில் இருந்து தேர்வாகியிருக்கிறீர்கள். அவர்களில், 56 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

இந்த எண்ணிக்கை இன்னும் உயர வேண்டும். உங்களை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்னும்பல இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று மிகப்பெரிய பொறுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ். போன்ற பொறுப்புகளில் அமரும் உங்களுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பணி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாய்ப்பு, உங்களை மேலும் பொறுப்புடையவர்களாக உயர்த்த வேண்டும். அடக்கத்தையும், மனிதநேயத்தையும் வளர்க்க வேண்டும். அதிகாரிகள் என்றால், அலட்டலாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை

சாதாரண மக்களிடம் அன்பாக, பண்பாக நடந்துகொண்டால் அதுதான் உங்கள் பெயரை காலத்துக்கும் நிலைக்கச் செய்யும்.

அப்படி, அன்பும், அடக்கமும், சமூகநீதி பார்வையும் அடிப்படையாக வைத்து இந்தியாவின் ஏற்றத்துக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைப்பீர்கள்.

தமிழகத்துக்கு சிறப்பான பெருமையைத் தேடித் தருவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அரசு செயலாளர்கள் பிரதீப் யாதவ், சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *