சென்னை:
மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை அலட்சியம் மற்றும் சரியான மேலாண்மை செய்யாததால் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கடந்த மார்ச் 14-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது, தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல், தீயணைப்பு வீரர்கள் திரும்பி வந்துள்ளனர்.
சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டன் குப்பை சேகரிக்கப்படுகின்றது. மாநகராட்சியின் 1 முதல் 8-வது மண்டலம் வரை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திலும், 9 முதல் 15-வது மண்டலம் வரை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்திலும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் 333 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அங்கு ரூ.641 கோடியில் திடக்கழிவுகள் பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கும் பணி 2024-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
அகற்றப்பட வேண்டிய 66.52 லட்சம் டன் திடக்கழிவுகளில் இதுவரை 27 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, சுமார் 6 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் கேட்பாரற்று கிடக்கும்.
கோடை காலத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள குப்பை சேகரிப்போர், குப்பையை கொளுத்தி, ஒயர்களில் உள்ள உலோகங்களை சேகரிப்பது வழக்கம். அண்மைக் காலமாக குப்பை கொட்டும் வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
குப்பையில் சிறு தீ ஏற்பட்டாலும், தீயணைப்பு துறை உதவியுடன் தீயை அணைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதுமான நீர் இருப்பும் உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது.
அதுமட்டுமல்லாது, குப்பை கொட்டும் வளாகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்குள் கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 நிமிடத்துக்குள் தீயணைப்பு வாகனங்கள் வந்துவிட முடியும்.
தற்போது பழைய குப்பையை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறுவதால், அங்கு தொழிலாளர்களும் பணியில் இருப்பர். இந்நிலையில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டு, வானமே புகை மண்டலமாக மாறியது.
இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகையால், இந்த வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை நாற்றத்தாலும், கருந்துகள்கள் விழுந்ததாலும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயணைப்பு வாகனங்களே செல்ல முடியாதநிலை இருந்துள்ளது.
இதனால் தீயை அணைக்காமல் தீயணைப்பு வீரர்கள் திரும்பினர். அங்கு குப்பையில் தீ விபத்து ஏற்பட்டால், வாகனங்கள் எளிதில் செல்ல எந்த மேலாண்மையும் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையால் செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை மற்றும் உயரதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர்.
ஒருவேளை தீ விபத்து பெரியதாக இருந்திருந்தால், காற்றின் போக்கு மாறியிருந்தால் நிச்சயமாக அப்பகுதியில் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கும் என வட சென்னை குடியிருப்போர் நல சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மாநகராட்சியின் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இனி வரும் காலங்களிலாவது தீ தடுப்பு மேலாண்மையை மாநகராட்சி முறையாக செய்ய வேண்டும் என்பது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.