புதுச்சேரி:
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி உடைகிறது. மத்திய அமைச்சர் தனிவிமானத்தில் வரும் சூழலில் பேச்சுவார்த்தையை தவிர்க்க திருச்செந்தூருக்கு முதல்வர் ரங்கசாமி திடீரென்று புறப்பட்டார்.
டெல்லியில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி விதித்த நிபந்தனைகள் குறித்து பேசப்பட்டது. அப்போது, “கூட்டணியில் இடம்பெறும் புதிய கட்சியால், எந்த தொந்தரவும் இருக்காது, அதை பாஜக கையாளும்” என ரங்கசாமியிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தனி விமானத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லி சென்ற குழுவினர் புதுவைக்கு புறப்பட்டனர்.
கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி முதல்வர் ரங்கசாமியை மீண்டும் ஒரு முறை சந்தித்து சமாதானம் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக பிற்பகலில் புதுச்சேரி வந்த பிறகு முதல்வர் இல்லத்துக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுவை மாநில பாஜக நிர்வாகிகள் வர உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
ஆனால் இந்த சந்திப்பை தவிர்க்க முதல்வர் ரங்கசாமி, திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோயிவிலுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றார். மதுரையிலிருந்து திருச்செந்துார் சென்று முருகனையும் தரிசிக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் தரப்பினர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதை ரங்கசாமி விரும்பவில்லை.” என்கின்றனர்.
இதனால் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உடைகிறது. இதனால் பாஜக தனியாக அதிமுக, பாமக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதுவையில் போட்டியிட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.