சென்னை:
நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, ‘இம்மானுவேல் சேகரனார் மிஷன்’ ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ஒட்டப்பாலம் ‘இம்மானுவேல் சேகரனார் மிஷனின்’ கவுரவத் தலைவரும் – தியாகி இம்மானுவேல் சேகரனாரின் முதல் பேரனுமான ரமேஷ் தேவேந்திரர், இன்று காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்தார்.
அப்போது அவர், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ‘இம்மானுவேல் சேகரனார் மிஷன்’ நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என உறுதி அளித்தார்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழ.நெடுமாறன் ஆதரவு… இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர், “தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை தமிழகத்தில் திணிப்பது, இந்து மதவாதத்தை தூக்கி பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜக, தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மையான கடமையாகும்.
எனவே, பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.