மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டி!!

மதுரை
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதிமுக போட்டி யிடவில்லை என்று வருத்தத்தில் இருந்த அக்கட்சியினருக்கு சுந்தர் சிபோட்டியிடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் 2016. 2021 தேர்தல்களில் போட்டியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார்.

2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் பேராசிரியர் ஜெயபாலிடம் வெறும் 5,762 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு அதிமுக போட்டியிடாமல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், பழனிவேல் தியாகராஜன் எளிதாக வெற்றி பெற்றார்.

இந்த முறை என்டிஏ கூட்டணியில் இந்த தொகுதி எதிர்பாராதவிதமாக ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், மீண்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கே இந்த தொகுதி சாதகமாக மாறியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், புதிய நீதிக்கட்சியில் மதுரை மத்திய தொகுதியில் திடீரென சுந்தர்.சி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றுள்ளது.

அவர் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியி டுவதால் அதிமுகவினரும் சுணக்கமின்றி வேலை செய்வர் என்பதால், இத்தொகுதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், சினிமா பிரபலமான சுந்தர்.சி நடிகை குஷ்புவின் கணவர் என்பதால், இருவரின் பிரச்சாரம் இயல்பாகவே வாக்காளர்களிடம் கவனம் பெறும் வெற்றிக்காக சுந்தர் சியும் தேர்தல் பணிகளில் தாராளம் காட்டுவார் என்பதால், கட்சியினரும் ஆர்வமாக பணிபுரிவர்.

மத்திய தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் நடிகை குஷ்பு அச்சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது பிரச்சாரம் எடுபட வாய்ப்புள்ளது.

சுந்தர்.சி-க்காக அவரது ஆதரவு நடிகர், நடிகைகள் மற்றும் அதிமுக ஆதரவு நடிகர் பட்டாளம் களமிறங்கும். அதனால், தேர்தல் முடியும் வரை, மதுரை மத்திய தொகுதி மாநில அளவில் கவனம் பெறம்’ என்றனர்.

வேட்பாளரானது எப்படி ?: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்.சி, 37-க்கும் அதிகமான படங்களை இயக்கி உள்ளார்.

15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களில் பெரும்பாலும் காமெடி குடும்ப பாங்கான ஜனரஞ்சகமான கதைகளுக்கு தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். முறைமாமன் படத்தை இயக்கியபோது, அதில் நடித்த குஷ்புவை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குஷ்பு தற்போது பாஜகவில் இருக்கிறார். சுந்தர்.சி எந்த கட்சியிலும் இல்லை ஆனால் ஏ.சி.சண்முகத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வந்த நிலையில் அவருக்காக சுந்தர்.சியும், குஷ்புவும் பிரச்சாரம் செய்திருந்தனர்.

மதுரையில் கடந்த பிப்.22ம் தேதி குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்த வ.உ.சி. சிலை அடிக்கல் நாட்டு விழாவில் சுந்தர்.சி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *