பாமகவுடன் கூட்டணி என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால் அதை ஏற்றுக்கொள்வோம் – ராமதாஸை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை கருத்து!!

விழுப்புரம்:
பாமகவுடன் கூட்டணி என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொள்வோம் என்று ராமதாஸை சந்தித்த பின்னர், கு.செல்வப்பெருந்தகை கூறினார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவரது உடல்நிலையை விசாரித்தேன். கூட்டணி குறித்து பேச வரவில்லை. ராமதாஸ்-அன்புமணியை சமாதானப்படுத்துவதும் எனது வேலையல்ல. அவர்கள் சமாதானமாக இருந்தால் மகிழ்ச்சி.

திமுகவுடன் பாமக கூட்டணி என்பதை இண்டியா கூட்டணியின் தமிழக தலைவரான முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால், அதை ஏற்றுக் கொள்வோம். திமுக கூட்டணி ஒற்றுமையாகவும், வலிமையாகவும் உள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமையும்.

பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்று புரிதல் இல்லாமல் அன்புமணி கூறியுள்ளார். பாஜகவை சமாதானப்படுத்துவதற்காக அப்படி சொல்லி இருக்கலாம்.

திமுக வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகின்றனர். குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல், ஸ்டாலினுக்கு தெரியாது.

பாஜகதான் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கூட்டணி கட்சிகளை உடைக்கும் கலையில் பாஜக கைதேர்ந்தது. அதன்படி அதிமுகவை கபளீகரம் செய்யப் போகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும்.

அதிமுகவுடன் கூட்டணி என்று கூறிவிட்டு, அண்ணா, பெரியாரை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிடுகின்றனர்.

இதை அதிமுகவினர் வேடிக்கைப் பார்க்கின்றனர். நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோரை கொச்சைப்படுத்தி இருந்தால், நாங்கள் கூட்டணியில் ஒரு நொடி இருப்போமா?

தலைவர்களை பலி கொடுத்து, அரசியல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பாஜகவிடம் பயம் எதற்கு? இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *