சென்னை:
சட்டப்பேரவை தேர்தலையொட்டி அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அறிமுகக் கூட்டங்கள், தலைவர்களின் சந்திப்பு, நேரடி வாக்குச் சேகரிப்பு என தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுக சார்பில் களம் காணும் அ.பு. பூர்ணிமாவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், ஏப்.1-ம் தேதி அம்பத்தூர் வடக்கு பகுதி தேர்தல் பணிமனையில் நடைபெற்றது. அவர் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி ஆகியோரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். வேட்புமனுத் தாக்கல் செய்தபின், தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கே.என்.சேகரின் அறிமுகக் கூட்டம் ஏப். 1-ம் தேதி கொரட்டூரில் நடைபெற்றது.
அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், இன்று அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே நடைபெறும் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று, கே.என்.சேகரின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.
தவெக வேட்பாளர் ஜி. பாலமுருகன், வேட்புமனு தாக்கலுக்கு பிறகு வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
மண்ணூர்பேட்டையில் பணிமனையைத் தொடங்கியுள்ள அவர், அண்ணா நகர் மேற்கு மில்லினியம் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்களிடம் கலந்துரையாடி ‘விசில்’ சின்னத்துக்கு ஆதரவு கோரினார்.
மேலும், பாடி பகுதியில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய மக்களை சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தெ.க. சிலம்பரசன், தனது கட்சித் தொண்டர்களுடன் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிப்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளதை அடுத்து அம்பத்தூர் தொகுதியில் தேர்தல் களம் களைகட்ட தொடங்கியுள்ளது.