தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
தருமபுரியில் இன்று (ஏப்.15) மாலை 5 மணியளவில் தடங்கம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே திமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான டிஎன்வி செந்தில்குமார் (பாலக்கோடு – திமுக), ஜி.கே.எம். தமிழ் குமரன் (பென்னாகரம் – காங்கிரஸ்), மருத்துவர் இளங்கோவன் (தருமபுரி – தேமுதிக), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி – திமுக), சண்முகம் (அரூர் – திமுக) ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்ட பிரச்சார நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவே முதல்வர் வேனில் தருமபுரி வந்தடைந்தார். தருமபுரி அடுத்த பாரதிபுரத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்லத்தில் முதல்வர் இரவு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று அதிகாலையில் முதல்வர், தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கம் அல்லது உழவர் சந்தை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பார் என்ற தகவல் பரவி இருந்தது.
எனவே, தருமபுரி நகருக்குள் இன்று அதிகாலையில் நடைபயிற்சிக்கு வரும் முதல்வரை நேரில் காணும் ஆர்வத்துடன் ஏராளமானோர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், திடீர் ஏற்பாடாக பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு நகரில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பாலக்கோடு கோட்டை தெருவில் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களை சந்தித்து நலம் விசாரித்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து, பாலக்கோடு ஸ்தூபி மைதானம், கடை வீதி, பேருந்து நிலையம், தக்காளி மண்டி ஆகிய பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டபடி, மக்களை சந்தித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் முதல்வர்.
இந்த பிரச்சாரத்தின்போது, ஒரு குழந்தைக்கு பெற்றோர் பெயர் சூட்டக் கோரியதைத் தொடர்ந்து, அந்த குழந்தைக்கு திராவிடன் என முதல்வர் பெயர் சூட்டினார்.
நடைபயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வருடன் பொது மக்கள் பலர் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.