மறைமலை நகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர், தைலாபுரம், பேரமனூர் கொருக்கங்தாங்கல், சட்டமங்கலம், மறைமலை நகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக நகர செயலாளர் எம்.ஜி.கே.கோபி கண்ணன் தலைமையில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, பேரமனூர் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சமூகத் தீர்வு எட்டப்படும்.
சுத்தமான குடிநீர் தேவை நிறைவேற்றப்படும் சாலைகள் மேம்படுத்தப்படும், பராமரிக்கப்படாமல் உள்ள பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படும், ஆப்பூர் பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் திருக்கச்சூர், சட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்கள் பாதுகாப்பாக வசிப்பதற்கு ஏற்ற சூழல் மறைமலை நகரில் அமைக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்து வாக்குகளை சேகரித்தார்.
செங்கல்பட்டு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் எம்.கே.டி. கார்த்திக் – தண்டபாணி கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதியில் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியதாவது; திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களும் தமிழக திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பேசினார்.