தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்!!

சென்னை:
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜன.21) காலை அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். இவர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

முன்னதாக, ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

சட்டப்பேரவைக்கு சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து அவர் திமுகவில் இணைவார் என்று செய்திகள் வெளியாகின.

எதிர்பார்த்தபடி, அவர் ராஜினாமாவுக்குப் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

4 முறை எம்எல்ஏ.. வைத்திலிங்கம் 4 முறை ஒரத்தநாடு எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். அதிமுக உட்கட்சி பூசலின் விளைவாக ஓபிஎஸ் ஆரம்பித்த அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் வைத்திலிங்கம் இருந்தார். ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராகவே அவர் பார்க்கப்பட்டவர்.

இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி எம்எல்ஏவாக இருப்பவர் இன்னொரு கட்சியில் சேரக்கூடாது என்பதால் ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளது ஓபிஎஸ் அரசியலுக்கு நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்ட ஓபிஎஸ், அவரது ஒவ்வொரு ஆதரவாளராக இழந்து வருகிறார்.

அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார், அதேபோல் மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

திமுகவில் இணைந்தது ஏன்? – திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பாடுகள் உகந்ததாக இல்லை. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது.

அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்தது. நான் அங்கு தனியாக இணைய விரும்பவில்லை. பிரிந்தவர்கள் ஒன்றாக சேர வேண்டும் என்ற நோக்கில் நான் அதிமுகவுக்கு செல்லவில்லை.

அதேபோல், கூட்டணி தொடர்பான முடிவில் ஓபிஎஸ் தாமதம் செய்ததால் திமுகவில் இணைந்துள்ளேன்.

ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலினை மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் ஸ்டாலின். அதனால் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *