நாமக்கல்:
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியும், மசோதா நகலை தீயிட்டு எரித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் நாமக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்பேரில் மாநிலம் முழுவதும் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இச்சூழலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு நேற்று இரவு வந்தார்.
நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் தங்கினார்.
தொடர்ந்து இன்று காலை நாமக்கல் நல்லிபாளையத்திற்கு கருப்பு உடை அணிந்து முதல்வர் ஸ்டாலின் வந்தார். இதனையடுத்துஅங்கு செல்லப்பன் என்பவரது வீட்டின் முன் உள்ள கொடிக் கம்பத்தில் தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியேற்றினார். மேலும், மசோதா நகலை தீயிட்டு எரித்தார்.
முன்னதாக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் எனவும் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு விவசாயிகள், மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராணி, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பதிவு: தொடர்ந்து, இன்று நடைபெற்ற போராட்டம் குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும், பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்.
அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது.
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜக.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ” எனத் தெரிவித்துள்ளார்.