விருதுநகர்:
மர்மமாக ஏதும் செய்யப் போகிறீர்களா? புரட்சி வெடிக்கப் போகிறதா? என்று திமுகவுக்கு நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ஜி.கணேசனை ஆதரித்து பாண்டியன் நகர் பகுதியில் நடிகரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் நேற்று வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரச்சாரத்துக்கு செல்லும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் எழுச்சியாக உள்ளதை பார்க்க முடிகிறது.
ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இந்தத் தேர்தலில் வெற்றி உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தொகுதி மறுவரையறையை திமுக எதிர்க்கிறது. எங்களை மீறி செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த திமுகவை பார்க்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு திமுக எப்படி இருந்தது என்று ஸ்டாலின் கூறினால் நாங்கள் பாதுகாப்பு கேடயத்தை தயாராக வைத்துக் கொள்வோம்.
இப்படி ஒரு கடிதத்தை பிரதமருக்கு முதல்வர் எழுதலாமா? போராட்டக் களமாக உருவாக்கி அனுதாப அலையை வீசச் செய்யத்தான் இதுபோன்ற போராட்டம். பொய் பிரச்சாரம் செய்யக் கூடாது.
தமிழகத்தில் தொகுதி எண்ணிக்கை 59 ஆக மாற்றப்படும் என்று கூறியுள்ளார்கள். எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையவில்லை, இம்மாறுதல் 2029 வரை இருக்காது என்றும் கூறியுள்ளார்கள்.
சீன லைட்டரை பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டு, அதை பயன்படுத்தி நகலை எரிப்பது நியாயமா? ஜனநாயக நாட்டில் பிரதமருக்கு மிரட்டல் விடுக்கலாமா? மர்மமாக ஏதும் செய்யப்போகிறீர்களா? புரட்சி வெடிக்கப் போகிறதா? அப்படியெனில், தேச ஒற்றுமையை குலைக்கப் போகிறீர்கள். அப்படி என்றால் அது தேசப் பாதுகாப்பு சட்டத்துக்குள் வந்துவிடும்.
ஒற்றுமையை குலைக்கும் செயல்களை திமுக செய்கிறது. நிச்சயம் அதற்கு ஒரு காலம்வரும். தேர்தல் முடிந்தவுடன் இதைப்பற்றி பேச வேண்டியுள்ளது.
முக கவர்ச்சி மட்டும் அரசியலுக்கு போதாது. களப்பணியாற்ற வேண்டும்.
41 பேர் இறந்ததற்கு காரணம் விஜய்தான். இறந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து துக்கம் விசாரித்தவர் இவர்தான். விஜய் என்பவர் யார்? 10 நாட்களுக்கு அவரைப் பற்றி பேசாமல் இருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.