திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான பனியன் நிறுவனமானது 35,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இரவு பணி முடிந்து நிறுவனத்தை மூடி விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்து பனியன் நிறுவன காவலாளி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் பின்னலாடை எந்திரங்கள் மற்றும் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்…
திருப்பூர் மாநகர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கஞ்சம்பாளையம் பிரிவு பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து குடோனை பூட்டி விட்டு அண்ணாதுரை மற்றும் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதிகாலையில் குடோனுக்குள் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
குடோன் முழுவதும் பனியன் கழிவு துணிகள் இருந்ததால், அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலானது.
இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.