தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் அரசியல் காற்று மாறிவிட்டது; ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி அரசுகளின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் – பியூஷ் கோயல்!!

புது டெல்லி:
“தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் அரசியல் காற்று மாறிவிட்டது. ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி அரசுகளின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் கட்டத் தேர்தல்களுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

மிகத் தெளிவாகச் சொல்வதானால், இவ்விரு மாநிலங்களிலும் அரசியல் காற்று மாறிவிட்டது.

ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி அரசுகளின் பெருமளவிலான ஊழல்களும், இவ்விரு மாநிலங்களிலும் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலையும், மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.

அண்டை நாடுகளிலிருந்து நடைபெறும் ஊடுருவல் என்பது வாக்காளர்களின் முக்கிய கவலையாக இருக்கிறது.

இதுவே வரவிருக்கும் மேற்கு வங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை இழக்க வழிவகுக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.

2029 மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்குப் பிந்தைய தேர்தல்களில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டைப் பெற ஆவலுடன் காத்திருக்கும் இந்தியப் பெண்களின் நலன்களுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஊறு விளைவித்துள்ளன.

நமது சகோதரிகள், மகள்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் நாட்டின் அரசியலில் தங்களுக்குரிய நியாயமான பங்கை பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகுந்த உறுதியுடன் உள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸின் காந்தி குடும்பம், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி குடும்பம் மற்றும் தமிழ்நாட்டின் ஸ்டாலின் குடும்பம் ஆகியவை இந்தியப் பெண்களை முழுமையாக ஏமாற்றிவிட்டன.

தொகுதி மறுவரையறை குறித்த விவகாரத்தில் நாங்கள் 50 சதவீத இடங்களை விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தோம்.

இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே எவ்விதப் பாகுபாடும் இன்றி, ஒவ்வொரு மாநிலமும் சம விகிதத்திலான இடங்களைப் பெறும் வாய்ப்பு உருவாகியிருக்கும்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு எதிரானவர். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தற்போது உள்ள அதே விகிதாசார இடங்களை நாங்கள் தொடர்ந்து பராமரிப்பதை அவர் ஏன் விரும்பவில்லை?” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *