ஆண்டிபட்டி:
மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக வைகை அணையிலிருந்து நேற்று கால்வாய் வழியே தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மதுரையில் சித்திரை திருவிழான் முக்கிய நிகழ்வாக மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி மொத்தம் 170 மில்லியன் கனஅடி நீர் திறக்க நீர்வளத் துறை அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் விநாடிக்கு 500கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அணையின் சிறிய மதகுகள்வழியே வெளியேறிய நீர், முதலக்கம்பட்டி பிக்-அப் அணையில் இருந்து கால்வாய் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாய்க்கால் வழியே மதுரை செல்லும் இந்த நீர் செல்லூர் கண்மாயில் தேக்கப்பட்டு பின்பு ஆற்றில் மீண்டும் கலக்கும்.
வரும் 29-ம் தேதி வரை தொடர்ந்து நீர் திறக்கப்படும். இணைப்புக் கால்வாயில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறையினர் கூறுகையில், வைகை அணையில் இருந்து மதுரை வரையிலான வைகை ஆறு வறண்டு கிடக்கிறது.
வெயிலும் சுட்டெரிப்பதால், தொடக்கம் முதல் கடைசிவரை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் வழியிலேயே நீர் உறிஞ்சப்படும். ஆகவே சிமெண்ட் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர் விரயம் இருக்காது. இதன்மூலம் குடிநீர்திட்டக் கிணறுகளின் நீர் ஆதாரமும் உயரும் என்றனர்.