சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியம் (79), அத்தொகுதியில் திமுகவினர் விதிகளுக்குப் புறம்பாக மஞ்சள் நிற பூத்சிலிப்புகளை விநியோகம் செய்வதாகக் குற்றம்சாட்டி அவர்களைக் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸில் அவர் புகார் அளித்தும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பாலசுப்பிரமணியம், வள்ளுவர் கோட்டம் சந்திப்பு அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியத்தைச் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, நுங்கம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் அன்பரசனை பாலசுப்பிரமணியம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தலைமைக் காவலர் அன்பரசன் அளித்த புகாரின் அடிப்படையில், பாலசுப்பிரமணியம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தன்னைத் தாக்கியதாக பாலசுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.