‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயினில் தகுந்த பதிலை அளித்த திமுக எம்.பி கனிமொழி!!

மாட்ரிட்:
‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயினில் தகுந்த பதிலை திமுக எம்.பி கனிமொழி அளித்துள்ளார். அவரது பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 நாட்கள் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவில் அவர்களது பயணம் தொடங்கியது. தற்போது கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின் சென்றுள்ளனர். அங்கு ‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என கனிமொழியிடம் கேட்கப்பட்டது.

“‘வேற்றுமை ஒற்றுமை’ தான் இந்தியாவின் தேசிய மொழி. இந்த குழு உலகுக்கு சொல்லும் செய்தி இதுதான்.

அதுதான் தற்போதைய மிக முக்கியமான விஷயம். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். போர் தேவையற்றது.

தேசத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அதிலிருந்து திசை திருப்பப்படுகிறோம். காஷ்மீரும் இந்தியாவும் பாதுகாப்பான இடமாக உறுதி செய்கிறோம். அவர்களது முயற்சி எங்களை தடம் புரளச் செய்யாது.

இந்தியா அமைதியை விரும்புகிறது. அகிம்சை மூலம் தான் இந்தியா விடுதலை பெற்றது” என கனிமொழி பேசினார்.

மாட்ரிட் நகரில் புலம்பெயர்ந்த இந்திய மக்களுடனான கூட்டத்தில் கனிமொழி எம்.பி இதை தெரிவித்தார். பாஜக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளின் பிரதிநிதிகளும் கனிமொழி தலைமையிலான குழுவில் உள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *