மயிலம் முருகன் கோவிலில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும், மயிலும் இருக்கின்றன.
மயிலம் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.
இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன், பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படை தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.
இத்தகைய பல்வேறு பெருமைகளைத் தாங்கிய மயிலம் கோவிலை அருணகிரிநாதர், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள், வைத்தியநாத தேசிகர், பண்ருட்டி மணி அய்யர், அப்பாவு அய்யர், ஆ.சிவலிங்கனார், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாய முதலியார், தே.ஆ.சீனிவாசன், ராஜ மாணிக்கம் நடராஜன். ரத்தின முதலியார், வீரபத்திரன், பெரிய சாமிப்பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், வே.விஜயரங்கம் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.
மயிலம் தலத்தில் ஆனி மாத திருவாதிரை குருபூஜை, மாதக்கிருத்திகைகள், கந்தசஷ்டி பெருவிழா(சூரசம்காரம்), பங்குனி உத்திரப் பெருவிழா, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
நாள் தோறும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
ஞாயிறு மற்றும் விழா காலங்களில் கோவில் முழுநேரமும் திறந்திருக்கும்.