இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் போட்டிகளின் நீளம் அதிகரித்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருவதாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.
டி20 வடிவம் மூன்று மணி நேரத்தில் முடிவடைய வேண்டிய நிலையில், சமீபத்திய மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி 4 மணி 22 நிமிடங்கள் நீண்டது.
இதனால், போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் எழுதியப் பத்தியில் கூறியிருப்பதாவது:
“போட்டியின் போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன; மைதானத்தில் தேவையில்லாமல் மாற்று வீரர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் வருவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஸ்ட்ராட்டஜிக் டைம்-அவுட் நேரத்தில் மிகக் குறைந்த பேர் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். விக்கெட் விழுந்த பிறகு பேட்ஸ்மேன்கள் வருவதற்கான நேரத்தை இரண்டு நிமிடங்களில் இருந்து ஒரு நிமிடமாக குறைக்கலாம்.
டைம்-அவுட் முடிந்ததும் துல்லியமான நேரத்தில் அடுத்த பந்து வீசப்பட வேண்டும்.
இதில் தாமதம் ஏற்படுவதால் இரண்டரை நிமிட டைம் அவுட் 3 நிமிடங்களாக அதிகரிக்கிறது.
தற்போது அபராதமாக விதிக்கப்படும் பண அபராதம் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.
அதற்கு பதிலாக ரன்கள் அல்லது புள்ளிகள் குறைக்கும் தண்டனை விதித்தால் மட்டுமே அணிகள் சீரிய நடவடிக்கை எடுக்கும்.
மைதானம் ஒரு புனிதமான இடம்; விளையாடுபவர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர மற்றவர்கள் அங்கு செல்லக் கூடாது.
இவ்வாறு ஒழுங்குகளை கடுமையாகப் பின்பற்றினால் மட்டுமே ஐபிஎல் மேலும் சிறப்பாக, சுறுசுறுப்பாகவும் உலகத் தரத்தில் திகழும்,” என்று கவாஸ்கர் அந்தப் பத்தியில் எழுதியுள்ளார்.
இரவுப் போட்டிகள் கடும் தாமதமாவது பெரும் சோர்வை அளிக்கின்றது என்பது என்னவோ உண்மை.
இதை கவாஸ்கர் மிகச்சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளதாக அவருக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு கூடியுள்ளது.