ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதையடுத்து மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி!!

அகமதாபாத்:
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதையடுத்து விராட் கோலி மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அந்த அணியின் 18 ஆண்டுகால தவம் முடிவுக்கு வருகிறது.

கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற 4 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலை வந்தபோது ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியாகி விட்டது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்கள் வெற்றிக் கூச்சலிட தொடங்கினர்.

வீரர்கள் முகத்திலும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. மைதானத்தின் நடுவே விராட் கோலி உணர்ச்சிப் பிழம்பாக காணப்பட்டார். அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாமல் அவர் முகத்தை மூடிக் கொண்டு அழுதது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம் ஒவ்வொரு சீசனிலும் சமூக வலைதளங்களில் அதிக் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகும் ஒரு அணி என்றால் அது ஆர்சிபி மட்டுமே. ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற வாசகத்தை வைத்து கிண்டல் செய்வது தொடங்கி, ஆர்சிபி மகளிர் அணி கோப்பை வென்றதை வைத்து ‘பொம்பளை கப்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிலர் அந்த அணியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதுண்டு.

தற்போது இந்த வெற்றியின் மூலம் வசவாளர்களின் வாயை அடைத்துள்ளது ஆர்சிபி. ஆர்சிபியின் 18 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததை அந்த அணியின் ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *