திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி நாளில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!!

உலக புகழ்பெற்ற சிவஸ்தலமாகவும், ஆன்மிக தலைநகரமாகவும் உள்ள திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வரவும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை பல ஆயிரமாக உயர்கிறது.

பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீப தரிசன நாள் ஆகியவற்றின்போது பல மாவட்டங்கள், பல மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வழிபடுகின்றனர்.

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 9.52 மணிக்கு தொடங்கி இன்று இரவு 11.02 மணிக்கு நிறைவு பெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை வலம் வரவும், அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்யவும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத்தொடங்கினர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பகல் நேரத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தனர். நேற்று மாலை முதல் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த எண்ணிக்கை இரவில் பல லட்சமாக உயர்ந்தது. கிரிவல பக்தர்களின் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது.

நகரில் பல பகுதிகளில் உள்ள சாலைகளை ஆட்டோ டிரைவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் அந்த சாலைகளை கடந்து செல்ல முடியாமல் கிரிவல பக்தர்கள் மற்றும் நகர மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கிரிவலம் சென்றதால் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் தலைகளாகவே காட்சி தந்தது.

இதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அடிமேல் அடிவைத்து கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் நகருக்கு வரும் வழிகளில் ஏராளமான கார் நிறுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று இரவு 11.02 மணிவரை பவுர்ணமி உள்ளதால் அதிகாலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

சித்ரா பவுர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததால் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர் மோர், தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் வழங்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *