நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ – ஒன்பது, ராத்திரி – இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 8-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் ‘மகாகௌரி’. மகாகௌரி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
மகாகௌரி என்பவர் நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார். இவர் நவராத்திரியின் எட்டாம் நாளில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மகாகௌரி தூய்மை, அமைதி, அழகு, கருணை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
நவராத்திரி பண்டிகையின் எட்டாம் நாளில் வழிபடப்படும் மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர்.
மகாகௌரி என்றால் “வெண்மை” என்று பொருள்படும். மகாகௌரி தனது பக்தர்களின் பாவங்களை நீக்கி, மனதில் அமைதியையும், விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்.
“மகா” – பெரிய, “கௌரி” – பிரகாசம்.
மிகச் சுத்தமான பளிங்கு போன்ற பொன்னிற-வெண்மையான உடல் கொண்டவள். மகாகௌரியின் வாகனம் வெள்ளை காளை (நந்தி). அவரது ஆடை வெண்மை நிறம்.
சிவ மகாபுராணத்தில் மஹாகௌரி தேவி வரலாறு:
பார்வதி தேவி சிறுவயதிலிருந்தே சிவபெருமானையே தனது கணவனாக அடைய விரும்பினாள். அவரது விருப்பத்தை கண்டு, நாரதர் அவருக்கு கடுமையான தவம் செய்ய அறிவுரை கூறினார்.
இமயமலையின் காட்டில் பார்வதி தேவி பல வருடங்கள் கடுமையான தவம் செய்தாள். இதனால், அவளது உடல் மிகவும் வாடி, கருமையான நிறமடைந்தது.
அப்போது, அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவளை அருளால் ஏற்றுக்கொண்டார். அவரது கருமை நிறம் நீங்குவதற்காக சிவபெருமான், பார்வதியை கங்கை நதியில் நீராடச் செய்தார்.
நீராடிய பின்னர் பார்வதியின் உடல் பளிங்கு போன்ற வெண்மையுடன் மிளிர்ந்தது. அவள் மிகச் சுத்தமான, ஒளிவீசும் வடிவில் தோன்றினாள். அந்த உருவமே மஹாகௌரி என்று அழைக்கப்பட்டது.
வெள்ளை நிறம், அவளது முழுமையான சுத்தத்தின் அடையாளமாகக் கூறப்படுகிறது. சிவனின் சக்தியாக, அனைத்து பாவங்களையும் அழித்து, பக்தர்களுக்கு புதிய வாழ்வு, அமைதி, முக்தி தருகிறாள்.
நல்லவர்களைப் பாதுகாப்பதும், தீய செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதும் மகாகௌரியின் நோக்கம். மகாகௌரி தேவி தனது பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி, அனைத்து துன்பங்களையும் நீக்கும் சக்தி கொண்டவள்.
ஸ்லோகம்:
‘ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் மஹாகௌர்யை நம’ என்று ஜபிக்க வேண்டும்.
மகாகௌரியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். குடும்பத்தில் சாந்தி நிலைக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் ஏற்படும்.