காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு நேரில் வாழ்த்து!!

சென்னை:
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தவெக – காங்கிரஸ் கூட்டணி அறிவிப்புக்குப் பின் நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார், பிரவீண் சக்கரவர்த்தி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

அப்போது, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், மூத்த தலைவர் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில் அடுத்த ஆதரவு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *