உலகெங்கும் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து உயிர்கள் வாழ உலகை செதுக்கும் தொழிலாளர் உறவுகளுக்கு மே தின வாழ்த்து – சீமான்!!

உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும் உடல் உழைப்பு புரியும் எளிய மக்களின் வாழ்க்கை மட்டும் காலாகாலத்துக்கும் மாறாமல் இருக்கிறது.

காடாகவும், மலையாகவும் கிடந்த உலகை வாழுமிடமாகவும், தெருவாகவும் வடிவமைத்தவர்கள் தொழிலாளர்கள்தான். உலகின் வளர்ச்சியைத் தூக்கிச் சுமக்கும் முதுகெலும்புகளாக வாழும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கான வளர்ச்சி இன்றைக்குச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.

”பாலின்றி பிள்ளை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
வேலையின்றி நாமழுதோம் – என் தோழனே
வீடு முச்சூடும் அழும்,
காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
எனப் பாடிய ஐயா ஜீவாவின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்கக் கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே நம் தொழிலாளர் உறவுகள் இருக்கிறார்கள்.

விவசாயம் தொடங்கி வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளமாற அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களை நம்மில் எத்தனை பேர் திரும்பிப் பார்க்கிறோம்.

காலங்காலமாக தூக்கிச் சுமந்த தோள்களைத் தூக்கியெறியும் நன்றி உணர்வற்ற உள்ளங்களாகவே நம்மில் பலரும் நடந்து கொள்கிறோம். தொழிலாளர் மேன்மையும் அவர்கள் வாழ்வுக்கான வளமையும் பெருக உலகத்தார் அனைவருமே இன்றைய நாளில் உளமார உறுதியேற்க வேண்டும்.நமக்காகப் பாடுபடுபவர்களை கைதூக்கிவிட நாம் அனைவருமே ஒன்றுபடவும் வேண்டும்.

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கத்தை மேம்படுத்த ஆளுகின்ற ஆட்சியாளர்கள் எல்லாவித முனைப்புகளையும் காட்ட வேண்டும்.

தங்களுக்குள் ஒற்றுமைப் பெருக்கி எதையும் தட்டிக் கேட்கும் மகத்தான ஆற்றலாகவும், முன்னேற்றப் பாதையில் அடி வைக்கும் ஆளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட உலகெங்கும் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து உயிர்கள் வாழ உலகை செதுக்கும் தொழிலாளர் உறவுகளுக்கு ‘மே’ நன்நாளில் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *